மணைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !



நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.

அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல், அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.

பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம், அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.

இது போன்றவர்கள் நபியவர்களின் வாழ்வில் இருந்து நிறையவே படிப்பினை பெற வேண்டியுள்ளது. ஏன் என்றால் நபியவர்களே தங்கள் மணைவியரிடத்தில் தனக்குத் தேவையான ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.

அப்படியிருக்க நாம் ஏன் பெண்களிடம் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது?

நபியவர்கள் உம்ராச் செய்வதற்காக தங்கள் சகாபாக்களை அழைத்துக் கொண்டு வந்த நேரம் எதிரிகள் அதற்கு நபியவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

அந்நேரம் நபியவர்கள் எதிரிகளுடன் ஹுதைபிய்யா என்ற ஒப்பந்தத்தை போடுகிறார்கள். அப்போது நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இப்படிப்பட்ட பாராட்டத்தக்க ஒரு யோசனை சொன்னவர் ஒரு பெண்தான் ஆணல்ல.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

நபியவர்களிடம் விருந்தாளியாக ஒருவர் வந்த நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3798

ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சொல்வதைப் போல் நபியின் மனைவியரும், நபித் தோழர்களின் மனைவியரும் குடும்ப வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டதையும், தேவையான சந்தர்ப்பங்களில் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதையும், கணவன் சொல் பேச்சைக் கேட்டு நடந்ததையும் மேற்கண்ட செய்திகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
                                           -RASMIN M.I.Sc  - rasminmisc.tk
Previous
Next Post »