முதல் கேள்வி – கடவுள் உண்டா?
அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்துவிட்டு மனிதனுக்கு மட்டும் அறிவு, சிந்திக்கும் ஆற்றல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன், பாவமன்னிப்பு கோரும் தன்மை ஆகியவற்றை கொடுத்து தனது படைப்பினங்களிலேயே மிகச் சிறந்த படைப்பாக நம்மை புகழ்கிறானே அந்த கடவுள் (அல்லாஹ்) இருக்கிறானா? என்று கேட்கிறார்கள் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன் இவர்கள் என்றைக்காவது கீழ்கண்டவற்றை சிந்தித்த துண்டா?
- தினமும் சூரியன் உதிக்கிறது, மறைகிறது!
- இரவும் பகலும் மாறி மாறி இயங்கிக்கொண்டிருக்கிறது!
- சந்திரன் பல நிலைகளை அடைகிறது!
- மெல்லிய காற்றுடன் மழை பொழிகிறது!
- மேகக்கூட்டங்கள் கீழே விழாமல் விண்ணில் மிதக்கிறது!
- இடி இடிக்கிறது மின்னல் மின்னுகிறது!
மேற்கண்ட இவைகள் மனிதனால் இயக்க முடியாதவை மேலும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை! இப்படிப்பட்ட சக்திகளை இயக்குவதற்கு ஒரு ஆற்றல் இருப்பது உண்மையென்றால் கடவுள் இருப்பதும் உண்மைதானே! அவ்வாறு இருக்க நம்மில் பலருக்கு ஏன் இந்த சந்தேகம்!
அல்லாஹ் கூறுகின்றான்;அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும்,பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்குவசப்படுத்தித்தந்தான். அல்குர்ஆன் 14:32
இரண்டாம் கேள்வி – கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை?
இறைவன் இருக்கிறானா என்று கேட்ட மனிதன் இப்போது இறைவனை ஏன் பார்க்க முடிவதில்லை என்று கேள்வி எழுப்புகிறான் ஆனால் ஒருநாள் கூட அவனால் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய உயிரை பார்க்க முடிவதில்லை! என்றைக்காவது இது பற்றி அவன் சிந்தித்தது உண்டா?
மனிதனோ தன்னுடைய உயிரைக்கூட பார்க்கக் வக்கற்றவனாக படைக்கப்பட்டுள்ளான் ஆனால் படைத்த இறைவனைப் பார்க்க ஆசைப்படுகிறான் ஆசை நிராசையானதும் விரக்தியுடன் கடவுள் இருந்தால் தென்படுவான் அவன் இல்லை அதனால்தான் பார்க்க முடிவதில்லை என்கிறான்! இது இவனது அறியாமையா? இவனது இயலாமையா?
இறைவனை இந்த உலகில் பார்க்க முடியாது என்று பல்வேறு வேதங்கள் சான்றுரைக்கின்றன அப்படிப்பட்ட வேதங்களின் வரிசையில் இந்துமத வேதமான யஜூர் வேதம் மற்றும் நமது அருள்மறை திருக்குர்ஆன் ஆகியன படைத்த இறைவனை பார்க்க முடியாது என்று ஆணித்தரமாக தெளிவாக சாட்சி கூறுகின்றன இதோ ஆதாரங்கள் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது!
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்கவழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
“பார்வைகள் அவனை அடைய முடியா. ஆனால் அவனோ எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்து அடைகின்றான். (அருள்மறை குர்ஆன் 6: 103)
ஆனால் அருள்மறை குர்ஆன் ஒருபடி முன்னே சென்று இம்மையில் எவராலும் அல்லாஹ்வை பார்க்க முடியாது என்றும் மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்றும் ஒளிவு மறைவு இன்றி கூறுகிறது!
மூன்றாம் கேள்வி – கடவுள் எவ்வாறு படைக்கப்பட்டான்?
கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டோம், அவனைப் பார்க்க முடியாது என்பதையும் அறிந்துக்கொண்டோம் அப்படி யானால் அவனை யார் படைத்தது என்பதே உங்களின் அடுத்த கேள்வியாக அமையும் ஆம் இது கேட்கப்படக்கூடிய கேள்விதான்! காரணம் நாம் பிறக்கிறோம் அதற்கு தாய், தகப்பன் உதவி தேவை எனவேதான் இந்த கேள்வி எழுகிறது ஆனால் மனிதன் சிந்திக்க வேண்டும்!
மனித இனமாகிய நமக்குதான் பெற்றோர் தேவை இறைவன் மனித இனமில்லையே அப்படி இருக்க அவனுக்கு ஏது படைப்பு! உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியை நீங்கள் உங்கள் கைகளால் உருவாக்குகிறீர்கள் அப்படியானால் தொலைக் காட்சிப் பெட்டியாக நீங்கள் இருப்பீரா? இல்லையே!
கடவுளை யாரும் படைக்க முடியாது என்று எத்தனையோ வேதங்கள் சாட்சிகூறுகின்றன அவைகளின் வரிசையில் யஜூர் வேதம் மற்றும் நமது அருள்மறை திருக்குர்ஆன் ஆகியன இறைவனை யாராலும் படைக்க முடியாது என்று தெளிவாக சாட்சி கூறுகின்றன இதோ ஆதாரங்கள் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது!
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்கவழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மத் ) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை(அல்குர்ஆன்- சூரா இக்லாஸ்)
இந்துமதமோ இறைவனை பார்க்க முடியாது படைக்க முடியாது என்று சாட்சி கூற இறைவேதமான அருள்மறை குர்ஆன் இறைவனுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, பெற்றோர், மனைவி, பிள்ளை இல்லை என்று இழிவு கிடையாது இறைவன் இறைவனாகத்தான் இருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக சாட்சி கூறுகிறது.
நான்காம் கேள்வி – இறைவனுக்கு சிலை, உருவம் கூடாதா?
நம்மால் இந்த உலகில் கடவுளை எங்கும் பார்க்க முடியாது என்பதை இந்துமத வேதம் மற்றும் அல்குர்ஆன் வாயிலாக தெளிவாக அறிந்துக் கொண்டோம் நிலைமை இப்படி இருக்க, கடவுள் இப்படி இருப்பாரோ? அப்படி இருப்பாரோ என்று கற்பனை செய்வது கூடுமா?
உதாரணமாக ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வோம் இந்த பழத்தை பற்றி ஆப்ரிக்காவில் வாழும் ஒரு ஆதிவாசி வாழ்நாளில் ஒருமுறைகூட கண்களில் பார்க்கவில்லை, சுவையை அறியவில்லை ஆனால் காதுகளால் ஆப்பிள் என்ற பழம் ஒன்று உள்ளது என்பதை கேட்டுள்ளான் என்று வைத்துக்கொள்வோம் இப்போது இந்த ஆதிவாசி பெயர் சொல்லத் தெரியாத கடுக்காயை காயை கையில் எடுத்துக் கொண்டு தம் ஆதிவாசி சமுதாய மக்களிடம் சென்று கடுக்காயை நீட்டி இது ஆப்பிள் பழம் இதன் சுவை கசப்பாக இருக்கும் என்று கூறினால் மோசம் போவது யார்?
சிந்தித்துப் பாருங்கள் அந்த ஆதிவாசி தம் சமுதாயத்திடம் சென்று ஆப்பிள் பழத்தின் சுவை, நிறம், எடை, தோற்றம் ஆகியவைகளை நான் உணரவில்லை ஆனால் ஆப்பிள் என்ற பழம் உள்ளது என்று கூறினால் அவன் உண்மை பேசுகிறான் என்று அர்த்தம்? அல்லது கடுக்காயைத்தான் ஆப்பிள் பழம் என்று தானும் தவறாக எண்ணிக்கொண்டு தம் சமுதாய மக்களையும் குழப்பினால் அவன் பொய் பேசுகிறான் என்றுதானே அர்த்தம்?
மேற்கண்ட ஆப்பிள் பழ உதாரணத்தை கடவுளுக்கும் என சிந்தித்துப்பாருங்கள் கடவுளையும் அவனுடைய அழகிய தோற்றத்தையும் கண்களால் காணவில்லை ஆனால் கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்து வைத்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் கல்லை எடுத்து கலை நுணுக்கத்துடன் உருவம் கொடுத்து இதுதான் கடவுள் என்றால் என்ன சொல்வது? அந்த அறிவற்ற ஆதிவாசிக்கும் அறிவுள்ள நகரவாசிக்கும் என்ன வித்தியாசம்!
இறைவனுக்கு எந்த வஸ்துவை வைத்தும் இணை வைக்கக்கூடாது என்று எத்தனையோ வேதங்கள் உண்மை கூறுகின்றன அவற்றின் பட்டியலில் இந்துமத வேதமும், கிருத்தவ பைபிளும், உலகப் பொதுமறை அருள்மறை குர்ஆனும் மனிதவர்க்கத்தை நோக்கி இறைவனுக்கு எந்த வஸ்துவை வைத்தும் இணை வைக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறது அறிந்துக் கொள்ளுங்கள்!
இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் இந்துமத வேதம்
“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3)
பொருள்
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் பைபிள் வசனம்
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.
இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் திருக்குர்ஆன்
وَاعْبُدُواْ اللّهَ وَلاَ تُشْرِكُواْ بِهِ شَيْئًا
மேலும், அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்கள் (அல்குர்ஆன் 4:36)
இணைவைப்பவர்கள் நஷ்டவாளிகள் என்று கூறும் வேதங்கள்
இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர்,நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது;அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிற வர்கள் யாவரும்,அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.(பைபிள்) சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)
ஐந்தாம் கேள்வி – ஏன் பல கடவுள்களை வணங்கக்கூடாது?
ஒரு கடவுளால் ஒன்றும் செய்ய முடியாது பல கடவுள் இருந்தால் நலமாக இருக்கும் என மாற்றுமதத்தவர்கள் நம்புகிறார்கள் அது முறையற்ற வாதமாகும். பல கடவுள் கொள்கை நம்புபவர்கள் கீழ்கண்ட உதாரணத்தை அறிந்துக் கொண்டால் தங்கள் வாதம் முற்றிலும் தவறானது என்பதை உணர்ந்துக் கொள்வார்கள்
ஒரு மனிதன் 10 பாவங்கள் செய்துவிட்டான் உடனே பகவானை-1 அணுகி பாவ மன்னிப்பு கேட்கிறான் ஆனால் பகவானோ-1 ஒரு பாவத்தை மட்டும் மன்னித்துவிட்டு மற்ற 9 பாவங்களை மன்னிக்க முடியாது என்று கூறி கைவிறிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் உடனே அந்த பாவியான மனிதன் மற்ற 9 பாவங்களை சுமந்துக்கொண்டு பகவான்-2. பகவான்-3, பகவான்-4, பகவான்-5 ஆகியோரிடம் செல்கிறான் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவத்தை மன்னித்து விடடுகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் முதன் முதலாக மன்னிக்க மாட்டேன் என்று கூறிய பகவான்-1க்கு என்ன மரியாதை இருக்கிறது.
சரி, ஆண் பகவான் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பெண் பகவானிடம் செல்கிறான் அதுவும் மன்னிக்கவில்லை உடனே அண்-பெண் (ஆண் பாதி, பெண் பாதி) கடவுளிடம் செல்கிறான் உடனே பாதி உடல் கொண்ட அண்-பெண் பகவான் மன்னித்துவிடுகிறது. இங்கு கேள்வி என்னவெனில் ஆண் மற்றும் பெண் பகவான் ஆகியோர் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய ஒரு பாவத்தை இருவரும் இணைந்து அண்-பெண் பகவானாக இருக்கும்போது மன்னிப் பார்களா?
கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தில் இறைவனைக் குறித்து அவன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை உற்று நோக்கவும் இந்த வசனத்தில்அவர்கள் என பண்மையாக இருந்தால் பல கடவுள்கள் வணங்க வேதம் அறிவுறுத்தியிருக்கும் ஆனால் இறைவனை ஒருமையாக அவன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற,காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
ஆறாம் கேள்வி–ஏசுநாதர் இறைவன் மகன் இல்லையா?
ஏசுநாதர் தந்தையின்றி பிறந்ததால் அவரை இறைவன் மகன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கிறார்கள் காரணம் ஏசுநாதருக்கு தந்தை கிடையாது என்பதே! தந்தையின்றி பிறந்த ஏசுநாதரை இறைவனின் மகன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் இறைமகனாக, மகளாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி ஏசுநாதர் பிறந்தார் ஆனால் ஆண், பெண் எந்த துணையுமின்றி ஆதாம் படைக்கப்பட்டாரே!
ஏசுநாதர் அதாவது நம் இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் மீது இரக்கம் கொண்டதாலும் அவர்களின் மீது பரிவு கொண்டதாலும் அவரை உண்மை குமாரர் என்று பைபிள் கூறுகிறது இதனை வைத்துக்கொண்டே கிருத்தவர்கள் ஏசுநாதரை சர்வ வல்லமை படைத்த பிதாவின் குமாரர் என்று கூறுகின்றனர் ஆனால் அதே பைபிள் வேதம் சாதாரண மனிதர்கள் கூட பிதாவுக்கு உண்மையான குமாரர்களாக மாறமுடியும் என்று சாட்சி கூறுகிறது! இந்த உண்மையை ஏன் கிருத்தவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதோ ஆதாரம் கீழே!
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5-ல் பைபிளின் கீழ்கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள் நீங்களும் தேவ குமாரராகளாம்!
43 உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு, என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர் களுக்காக ஜெபியுங்கள்.
45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர் களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார்.
46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப் பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள்.
47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்த வர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள்.
48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற் குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
ஏசுநாதர் தேவ குமாரனா? தேவ ஊழியனா?
சகோதரர்களே! மேற்கண்ட மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5-ஐபடித்திருப்பீர்கள் இதில் ஏசுநாதர் பிதாவின் மீது உண்மையான விசுவாசம் கொண்டு மனிதர்கள் மீது பரிவு காட்டியது குறிப்பிடப்பட்டுள்ளது அதுபோன்று அவரது சமுதாயமும் விளங்க வேண்டும் அப்போது அவர்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்குகுமாரர்கள் என்ற வார்த்தை ஊழியன் என்ற வகையில் தானே பொருள்படும்! அப்படியானால் தேவ குமாரன் ஏசு என்பதை தேவனின் ஊழியன் ஏசுநாதர்என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் ஆனால் கிருத்தவர்கள் ஏசுநாதர் உண்மையாளராக இருப்பதால் அவரை தேவ குமாரனாகவும், ஏசுநாதரை பின்பற்றியவர்கள் உண்மை யாளர்களாக இருந்தால் தேவ ஊழியன் என்றும் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? ஏசுநாதர் தேவ குமாரர் என்றால் அவரைப் பின்பற்றும் அனைவரும் தேவ குமாரர்கள்தான்! ஏசுநாதர் தேவ ஊழியன் என்றால் அவரைப் பின்பற்றும் அனைவரும் தேவ ஊழியர்கள்தான்! இதுதான் உண்மை! ஈஸா (அலை) அல்லாஹ்வின் மகனல்ல! திருக்குர்ஆனை புரட்டிப்பாருங்கள்!
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ وَقَالَتْ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُواْ مِن قَبْلُ قَاتَلَهُمُ اللّهُ أَنَّى يُؤْفَكُونَ
யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? அல்குர்ஆன் 9:30
முடிவுரை
இந்துக்களின் வேதம், கிருத்தவகளின் வேதம் ஆகியன இறைவன் ஒருவன், இணைதுணை இல்லாதவன், படைப்பினங்கள் அவனை இவ்வுலகில் காண முடியாது அவனுக்கு நிகர் யாருமில்லை என்கிறது! இதையே இறுதியாக வந்த அருள்மறை குர்ஆனும் கூறுகிறது.
திருமறைக் குர்ஆனுக்கு முன் வந்த பல வேதங்களில் திருத்தல்கள் இணைப்புகள் என எத்தனையோ நடந்தேரியுள்ளன ஆனாலும் திருமறைக் குர்ஆனில் அப்படிப்பட்ட திருத்தங்கள் எதுவும் நுழையாமல் 1400 ஆண்டுகளாக அல்லாஹ் பாதுகாத்து வருவதும் மேலும் அருள்மறை குர்ஆன் அருளப்படும்போது இருந்த அதே நடையில் சுவையுடன் இருப்பதும் மாபெரும் அற்புதம்தானே!
அல்லாஹ் கூறுகிறான்: ‘மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக்கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்துள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்ப தாகவுமிருக்கின்றது‘. (அல்மாயிதா 5:48)
இது(குர்ஆன்) இறைவனின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேமும் இல்லை. (திருக்குர்ஆன் 2:2)
இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை.(திருக்குர்ஆன் 68:52)
(முஹம்மதே) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (திருக்குர்ஆன் 14:1)
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாகஅமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரையை ஏற்றுக் கொள்ள எவரேனும் இருக்கின்றாரா? (திருக்குர்ஆன்54:17)
எவ்வித ஐயமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம்இறக்கியருளப்பட்டிருக்கின்றது. (நபியே) எது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும். (திருக்குர் ஆன் 32:2;13:1)
திண்ணமாக இந்த நல்லுரையை நாம் தான் இறக்கி வைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.(திருக்குர்ஆன்15:9)
சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஓர் அழகிய அழைப்பு!
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153
لا اله الا الله محمد رسول الله
லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ்
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்
(எழுத்துப்பிழை, தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்! சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம்!)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அறிவைக் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும் நாம் அவனின் அடிமைகளாக இருப்போம்!
EmoticonEmoticon