வரதட்சனை ஒழிப்பில் நம் பங்கு!



நம் சமுதாயத்தில் எவ்வளவோ கொடுமைகள் மார்க்கத்தின் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரிக் கொடுமைகளுக்கு முன்னதாக ஒரு பாத்திஹாவும் முடியும் போது ஒரு பெரிய துவாவும் போட்டு சங்கைமிக்க தாக்கி விடுவார்கள்.


மேலும் மறக்காமல் நேர்ச்சை வேறு. முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் இம்மாதிரியான சமூகக்கொடுமை களில் ஒன்று வரதட்சனை ஆகும். இந்தக் கொடுமையை ஒழிக்க ‎இன்று பல அல்ல சில ஜமாஅத்கள் மட்டுமே பல அவமானங்களை தாங்கியும், பலதரப்பட்ட ஏச்சு மற்றும் பேச்சுக்களை காதில் வாங்கிக் கொண்டும்   வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)



ஒவ்வொரு ஆணும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது. முஸ்லிம் சமுதாயத்தில் பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் நம் சமுதாயப் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அல்லது யாருடனாவது ஓடிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.


சுன்னத்தைப் பின்பற்றுகிறோம் என்று கூறும் ஜமாஅத்கள் இந்தக் கொடுமையை தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக இந்தக் கொடுமைக்கு ஆதரவாக அல்பாத்திஹா ஓதவும் துஆ ஓதவுமே முன்னிலையில் நிற்கின்றது. இதுதான் அவர்கள் கூறும் சுன்னத்தா என்று தெரியவில்லை. இன்று நம் சமூகத்தில் சாதரணமாக பணம் வைத்துக் கொடுப்பதற்கு என ஒரு ஸ்பெஷல் பாத்திஹாவே ஓதுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் மஹர் பணத்தை கேட்டால் 101, 1001 என்று இருக்கும். பணம் வைத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி மஹர் பணமா வரதட்சணை பணமா என்பது யாருக்கும் தெரியாது.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் எழுச்சியே இக்கொடுமைக்கு எதிராக நம் சமுதாய மக்களை அணிதிரள வைத்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. ‎முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தையும், மாரியாதையையும் குழிதோண்டிப் புதைத்த இக்கொடுமையை முற்றாக ‎ஒழிக்க வேண்டுமானால் இச்சமூகத்தின் அனைத்து சக்திகளும் இந்த வரதட்சனைக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும்.‎

சுன்னத்தை பின்பற்றுகிறோம் நான்கு மத்ஹப் இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்று கூறுபவர்கள் இந்த கொடுமையை பற்றி மருந்துக்குக் கூட பேசுவது இல்லை. இதற்கு என்ன காரணம், எப்படி இவர்கள் இதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அல்லாஹ்வுக்கே வெளிச்சம். சொல்ல முடியாது வரதட்சணைக்கு ஆதரவாக மத்ஹப் நூல்களில் ஆதாரம் இருக்கிறது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த உலகத்தின் பொருளாதாரத்திற்கும், அநியாயங்களுக்கும் துணைபோகாத ஒரு தலைமைத்துவத்தால் மட்டுமே இக்கொடுமையை முற்றாக ஒழிக்க முடியும். முஸ்லிம் சமூகம் தூய இஸ்லாத்தின் போதனைகளை குர்-ஆன் ஹதீஸின் படி போதிக்கும் அத்தகைய தலைமையை கண்டறிந்து மனமுவந்து ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது போன்ற கொடுமையை ஒழிக்க முடியும்.

முஸ்லிம் சமூகம் இன்றுவரை சந்தித்து ‎வரும் பின்னடைவுகளை நாம் விளக்கத் தேவையில்லை. முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் இக்கொடுமைக்கு ‎உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மார்க்க அறிஞர்கள் முன்வரவேண்டும்.‎ பல வருடங்கள் மார்க்க அறிவைப் படித்துவிட்டு திருமண நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தை கைகழுவும் எத்தனையோ உலமாக்களைப் பார்க்கின்றோம். இதில் படித்த ‎பட்டதாரிகளும் விதிவிலக்கானவர்களல்ல.

திருமணம் மற்றும் வரதட்சனைக் கொடுமையால் முஸ்லிம் சமூகமே சீரழியும் இந்நேரத்தில் வாராந்தோறும் ஜும்மா மிம்பர் மேடைகளில் அதனைக் கண்டிக்காமல் வரதட்சனைத் திருமணங்களிலும் கலந்து சிறப்பித்து வரும் இந்த உலமாக்களை என்னவென்று அழைப்பது? தீர்ப்பு நாளின் அதிபதியான அல்லாஹ் போதுமானவன்.‎ அப்போது இவர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றியும், பாராமுகமாயிருந்ததைப் பற்றியும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வரதட்சனை ஒழிப்பில் ஒரு மார்க்க அறிஞரின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. வரதட்சனையை  வாங்கி ஏப்பமிடும் மணமகனும் அல்பாத்திஹா சொல்லி வரதட்சனைக் கொடுமையைத் துவக்கி வைக்கும் இவ்வுலமாக்கள் ‎அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக்கொள்ள வேண்டும்.‎ அனைத்து சமூகத்தினர் களும் மிகத் தெளிவாக விளங்கும் இக்கொடுமைக்கு ஆதரவு தெரிவிப்பதும் அல்லது ‎அதனைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்வதும் ஆரோக்கியமானதல்ல.‎

இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உலமாக்கள் அலட்சியமாக ‎நடந்துகொண்டால் நாளை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் மார்க்க அறிஞர்களை உதாசீனம் செய்யும் ‎அவல நிலை இச்சமூகத்திற்கு ஏற்படுமென் பதில் எவ்வித சந்தேகமுமில்லை.‎ வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும். ஆமீன்!
                                             -நன்றி MPM PAGES
Previous
Next Post »