” இஸ்லாத்தில் சமத்துவம் ” ( நான் புரிந்துகொண்ட நபிகளும் இஸ்லாமும்-10 )



  பெரியாரையும் மார்க்சீயர்களையும் ஈர்த்த அம்சம்
                                                 அ.மார்க்ஸ்


      பெரியார் முழுமையான நாத்திகராக விளங்கிய போதிலும் இஸ்லாமிய இறை நம்பிக்கைகளில் ஒன்றை அவர் கற்றுக் கொண்டுள்ளார்.
  அது என்னவென்பதை விளக்குகிறார் கட்டுரையாளர்...

    பெரியார் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். சமூகத்தில் சமத்துவம் நிலவுவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியவர்கள் எல்லோரையும் இஸ்லாம் ஈர்த்து வந்துள்ளது. மதங்களையும் இறை நம்பிக்கையையும் ஏற்றுக் கொள்ளாதவர்களாயினும் பெரியாரும் மார்க்சீயர்களும் இஸ்லாத்தின் பக்கமே நின்றுள்ளனர். என்னைப் பொருத்த மட்டில் பிரெஞ்சு மார்க்சியரும் இஸ்லாமியவியலாளருமான மேக்ஸிம் ரோடின்சன் மூலமே இஸ்லாம் குறித்த ஈடுபாடு எனக்கு முதலில் ஏற்படலாயிற்று. இறைத்தூதர் முஹம்மது குறித்தும் இஸ்லாம் குறித்தும் அவர் எழுதியுள்ள ஏராளமான நூற்கள் மேலைத் தேசத்தினர் இஸ்லாம் குறித்து அவிழ்த்துவிட்ட பல கட்டுக் கதைகளைத் தவிடுபொடியாக்கக் கூடியவை. மோனெரோ போன்றவர்கள் இஸ்லாமின் நவீன வடிவமே கம்யூனிசம் என்று சொல்கிற அளவிற்குப் போயினர். இக்கூற்றை அப்படியே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லையாயினும் இத்தகைய ஒப்புமைக்கான கூறுகள் கவனிக்கப்பட வேண்டியவை. முஹம்மது கனவு கண்ட உம்மா(சமுதாயம்)வின் சமத்துவக் கூறுகளே அவை.
    தன்னை இஸ்லாம் ஈர்த்ததற்கான காரணங்களைப் பெரியார் ஈ.வெ.ரா. பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். அவற்றைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

    1)இஸ்லாம் மதத்தில் பல கடவுளர் வணக்கம் கிடையாது. விக்கிரக ஆராதனை கிடையாது. (பெரியார் சிந்தனைகள், ஆனைமுத்து-தொகுப்பு பக். 301,302)
    2)சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீண்ட்த்தகாதவர் என்றோ, வேதத்தைப் படிக்கக் கூடாதவர் என்றோ, ஆலயத்திற்குள் அல்லது பொது இட்த்திற்குள் நுழைய முடியாதவர் இங்கு யாருமே தடுக்கப்படுவது இல்லை. (மேற்குறிப்பிட்ட தொகுப்பு, பக் 32,33)
என்று தெளிவாகச் சொன்னவர் பெரியார்.
    இஸ்லாம் என்றால் ஏதோ லுங்கி கட்டிக் கொள்வதோ அல்லது தாடி வைத்துக் கொள்வதோ என்று நினைக்க வேண்டாம் என்று சொல்லிய பெரியார், இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்று பொருள்படும் அரபுச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத் தன்மை என்பது அவ்வளவு தான் என்று முத்தாய்ப்பாகக் கூறினார். தவிரவும்,

    ”நம்மிலும் பல பெரியார்கள்....  ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது போலவெல்லாம் சொல்லி பார்த்தார்கள். ஆனால் அவைகள் என்றும் ஏட்டளவில் இருக்கின்றனவே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலே, நடப்பிலே ஒரே ஆண்டவன் வழிபாடும் மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகின்றன” என்பதையும் சுட்டிக் காட்டினார்.

    உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்று வலியுறுத்திய பெரியார், இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று, தொழு நோய் போன்றது; வெகு நாளைய நோய் என்றார். இந்த நோயிலிருந்து விடுதலைப் பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என்பதையும் திரும்பத் திரும்பச் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடு நிற்கவில்லை,
    (இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான் – அது இஸ்லாம்தான்! இதை தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான்... நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும், வீரம் கொடுக்கும், நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.
    என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். (இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்ற பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947-ல் வெளியிடப்பட்டது. ஆனைமுத்து தொகுப்பிலும் காணலாம்.)
    வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்பவரல்லர் பெரியார். புகழ்பெற்ற வைக்கம் போராட்டத்தின் முதற் கட்டம் முடிந்த கையோடு,
   

    அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் (பெரியார்) த்லைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காகச் சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. சில செல்வாக்குப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேருவது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி அய்யப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்குப் போய்ச் சேருவது என்று திருத்தி போட வேண்டுமென்று சொல்லி ஏகமனதாக நிறைவேற்றச் செய்தார். இஸ்லாத்திற்குச் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஒரு அய்ம்பது பேர்களைப் போல முஸ்லிம்களாகி விட்டார்கள்; பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள்; இது ஒரு பெரிய கலக்கு கலக்கி விட்டது.
    என்று 09-01-1959 தேதியிட்ட விடுதலையில் பெரியார் எழுதுகிறார். இதன் பிறகே திருவிதாங்கூர் கோயிற் கதவுகள் தீண்ட்த்தகாதவர்களுக்குத் திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    அண்ணல்  அம்பேத்கர் 1930ல் முஸ்லிமாக மாறுவது என முடிவெடுத்தபோது மாளவியா, விஜயராகவாச்சாரி முதலியோரெல்லாம் அதைக் கண்டித்தனர். பெரியார் ஒருவரே, நீங்கள் ஒண்டியாப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். என்று தந்தி கொடுத்து ஊக்குவித்தார் (ஆனைமுத்து தொகுப்பு பக்1033). அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் குறித்துப் பெரியார் கூறியதும் நினைவுகூரத்தக்கது. அது:
    அம்பேத்கர் பவுத்தத்தில் சேர்கிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போலப் பலர் எதிர்த்தார்கள். ஆனால் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்குப் பவுத்தர் ஆகிவிடுவது என்று சொல்வதற்க்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனார்கள்) பயப்பட மாட்டார்கள். ஏனென்றால் பவுத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலர வைத்து விட்டார்கள். (சென்னை சொற்பொழிவு 13-5-52)


    முஸ்லிம்களின் அன்றைய முக்கிய அரசியல் கோரிக்கைகளை பாகிஸ்தான் பிரிவினை, தனி வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆகிய இரண்டையும் முழுக்க முழுக்க ஆதரித்த ஒரே தமிழ் அரசியல்வாதி பெரியார்தான். இஸ்லாமியர்களை அன்னியர்கள் எனவும் ராமராஜ்யம் எனவும், இந்துஸ்தானம் இந்துக்களுக்கே எனவும் சாவர்க்கார் போன்றவர்கள் சொல்லும் போது முஸ்லிம்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க இயலும் என்று கேட்ட பெரியார், ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது என்று முழங்கினார் (குடிஅரசு, அறிக்கை, 31-3-1940) வகுப்புப் பிரதிநிதித்துவத்தையும் வற்புறுத்தினார்.
    இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தவராகிய முகம்மதிய சகோதரர்களுக்குப் பங்கு உண்டா இல்லையா! என்று வினவினார். (குடியரசு, 14-2-26)
    இஸ்லாமியரைப் பெரியார், திராவிடர் என அணைத்துக் கொண்டது குறிப்பிடதக்கது. திராவிட மொழிகளில் ஒன்றான ப்ராஹீய் மொழி பலுசிஸ்தானத்தில் பயிலப்படுவதும் சிந்து வெளி நாகரீகத்தை புரோடோ எலாமோ நாகரிகத்துடன் இணைத்துக் குறிப்பிடுவதையும் இத்துடன் ஒப்பு நோக்க வேண்டும்.
    முழுமையான நாத்திகராயினும் இஸ்லாமிய இறை நம்பிக்கைகளில் ஒன்றை அவர் கற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
    .
    இறைத்தூது பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது. மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு அளித்த அல்லாஹ், அவர்களுக்கு அவ்வப்போது, ஆங்காங்கு இறைவனின் வழியைக் காண்பிக்கக் கூடிய இறைத்தூதர்களையும் அளித்தான். நபி, ரசூல், பைகம்பர் என அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவனால் அரபிய மக்களுக்கு இன்றைக்குச் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகட்டு முன்பு அளிக்கப்பட்ட  இறைத்தூதரே முஹம்மத் அவர்கள் நபிகளின் மூலம் பரிசுத்த குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அனைத்து மக்களுக்கும் தேவையான உண்மைகள் எல்லாம் அதில் உள்ளன என்பதும், முஹம்மத் மனிதகுலம் முழுமைக்கான இறைத்தூதர் என்பதும், இஸ்லாமிய நம்பிக்கை. மனிதகுலத்திற்கு எத்தனை போதனைகள் அளிக்கப்பட வேண்டுமோ அத்தனையும் அவர் மூலம் இறக்கப்பட்டுவிட்டதால் அவரே இறுதி இறைத்தூதர். இந்த அடிப்படையில்தான் முஹம்மது அவர்கள் இறுதித்தூதர் – இறைத் தூதின் தொடரை முடிவுக்குக் கொண்டு வருபவர் – காத்தமுன் நபிய்யீன் என அழைக்கப்படுகிறார்.
    மக்களே! முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் இறுதி நபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக உள்ளான் (33:40)
என்பது புனித குர்ஆனில் வெளிப்படும் இறை மொழி.
    தூதர்கள் எனும் நீண்ட சங்கிலி தொடரில் எனக்குள்ள தொடர்பு ஓர் அரண்மனைக்கு ஒப்பானதாகும். அந்த அரண்மனையோ மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதில் எல்லாமே பூர்த்தியடைந்து விட்டன. ஒரே ஒரு செங்கல் வைக்க வேண்டிய இடம்தான் காலியாக இருந்தது. அந்தக் காலியிடத்தையும் நான் நிரப்பி விட்டேன். கட்டடமும் பரிபூரணமாகி விட்டது. தூதுத்துவமும் இத்துடன் முடிவுற்று விட்ட்து.
    என ஹதீஸ்களும் (புகாரி, முஸ்லிம்) இதனை உறுதி செய்யும் 

    இறுதி நபித்துவம் என்கிற இக்கருத்தைப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் அவருக்கே உரித்தான பாணியில் சொல்வது ரசிக்கத் தக்கது. அது:

    தோழர்களே! மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறேன். நபி அவர்கள், மக்கள் சமுதாயத்திற்கு ஒரே கடவுள்; மக்கள் சமுதாயம் ஒரே குலம், உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக் கூடாது. நான் என்ன சொல்லி இருந்தாலும் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்பதாகச் சொல்லியிருக்கிறார்.
    கடைசியாக இன்னொன்றையும் சொன்னார்: நான் தான் கடைசி நபி. எனக்கு பின்னால் நபிகள் (தீர்க்கதரிசிகள்) தோன்ற மாட்டார்கள் என்று. அதைப் பற்றி நீங்கள் எப்படிக் கருதினாலும் என்ன முடிவுக்கு வந்தாலும் இன்றைய வரையிலே அவருக்கு பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை, கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை. அந்த அளவுக்கு மனித சமுதாயத்தின் எல்லா வாழ்வுத்துறைத் தன்மைகள் பற்றியும் உயர்ந்த தத்துவங்களை கொண்ட கோட்பாடுகள் சொல்லிவிட்டார் நபி அவர்கள்.(சென்னை சொற்பொழிவு, 20-12-1953)
    என்று சொல்லும் பெரியார், நபிகளின் மானுடத் தன்மை பற்றிச் சொல்வது சிந்திக்கத்தக்கது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் சார்பாக வெளியிட்ட (தற்போது வருவது இல்லை) ஒற்றுமை இதழில் சகோதரர் அ.மார்க்ஸ் எழுதிய நான் புரிந்து கொண்ட ந்பிகளும்,இஸ்லாமும் என்ற தொடர் கட்டுரையின் 10 ம் பாகம்

இதழ்            :- ஒற்றுமை
வெளியீடு :-TNTJ
நாள்             :01.12.2003
பக்கம்         :29-

இன்ஷா அல்லாஹ் பணி தொடரும்.......

POSTED BY
 
Previous
Next Post »