நல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...02


   
   நல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...என்ற தலைப்பில் துஆ வானது ஒரு நல்லமல் என்றும் அந்த துஆவை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்றும் அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்க கூடாது என்றும் கடந்த பதிவில் பார்த்தோம்...


இந்த பகுதியில் துஆ வின் ஒழுங்குகள் குறித்து பார்ப்போம்....


இரவின் கடைசி நேரம்:
     
     இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்:புகாரி, முஸ்லிம்

ஸஜ்தா செய்யும் போது:
    
     அடியான் அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

பிரயாணத்தில் கேட்கும் துஆ:
  
   முன்று துஆக்கள் ஏற்கப்படும். அவை ஏற்கப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ. பிரயாணத்தில் செல்பவனின் துஆ. தந்தை மகனுக்காக செய்யும் துஆ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்:திர்மிதீ, அபூதாவூது, அஹ்மத்

மறைமுகமாக செய்யும் துஆ:
    
   நமக்கு வேண்டியவருக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவருக்குத் தெரியாமல் துஆ செய்தால் அதுவும் அங்கீகரிக்கப்படும்.
   
    ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆ செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டிலொரு வானவர் இருப்பார். இவர் துஆ செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் என்று கூறிவிட்டு உனக்கும் அது போல் கிடைக்கட்டும் எனக் கூறுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூதர்தா (ரலி)       நூல்கள்:முஸ்லிம்

துஆவில் அவசரம் கூடாது:
   
  கேட்டவுடன் கிடைத்து விட வேண்டும் என்ற அவசரபடக்கூடாது ஆமா! என்னக் கேட்டு என்ன பிரயோஜனம் என்று ஒரு தடவை துஆக் கேட்டு நிறைவேறாவிடில், இந்த முடிவுக்கு வந்து விடுவார். அல்லாஹ் நம்மை படைத்த எஜமான். அவனிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.
     
  “நான் பிரார்த்தனை செய்தேன். அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்:புகாரி, முஸ்லிம்
     
  உறுதியான நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். கவனமற்ற ஈடுபாடு இல்லாத உள்ளங்களிலிருந்து வெளிப்படும் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்:திர்மிதீ
  
    ஏனோதானோ என்று கேட்காமல் வலியுறுத்தி கேட்க வேண்டும். உனக்கு விருப்பம் இருந்தால் தா என்று கேட்கக்கூடாது.
      
    உங்களில் எவரேனும் துஆ செய்தால் வலியுறுத்தி கேட்கட்டும். நீ விரும்பினால் தா என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் (ரலி)       நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    
    வரம்பு மீறாமல் பணிவுடன் உள்ளம் உருகிக் கேட்க வேண்டும்.
உங்களுடைய இறைவனிடம் பணிவுடனும் அந்தரங்கமாகவும் துஆ செய்யுங்கள். நிச்சயமாக வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை.
                                                             (அல்குர்ஆன் 7:55)
    
    அல்லாஹ் எந்த பிரார்த்தனையையும் நிராகரிக்க மாட்டான் என்ற உத்தரவாதம் இருந்தாலும் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.
  
    ‘‘நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு ஆடைகளும் உடம்பும் புழுதிப் படிந்த நிலையில் இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கின்றான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்:முஸ்லிம்
  
   நாம் கேட்கும் துஆவில் எவ்வித பாதகத்தையும் கேட்கக் கூடாது.


   உங்களுக்கு எதிராக நீங்கள் துஆ செய்ய வேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்ய வேண்டாம். உங்கள் பொருட்களுக்கு எதிராகவும் துஆ செய்ய வேண்டாம். ஏனென்றால் கேட்ட்தை அல்லாஹ் கொடுக்கும் ஒரு நேரமுண்டு. அந்த நேரத்தில் (இந்த வகையான) துஆக்களைக் கேட்டால் உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி)       நூல்கள்:முஸ்லிம்

கூட்டு துஆ:
  
   துஆ கேட்கிறோம் என்ற பெயரில் கூட்டு துஆ அதாவது ஒருவர் ஓத மற்றவர்கள் ஆமீன் கூறும் செயல் நடைபெற்று வருகிறது.
  
  முஃமின்களே! உங்களுடைய இறைவனை பணிவுடனும் மெதுவாகவும் நீங்கள் பிரார்த்தியுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயம் அல்லாஹ் நேசிப்பதில்லை.
                                                         (அல்குர்ஆன் 7:55)
          
         “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும் போதும் இறங்கும் போதும் தக்பீர் மூலம் (அல்லாஹ் அக்பர் என்று கூறி) எங்கள் குரலை உயர்த்தினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை நெருங்கி மனிதர்களே! உங்கள் மனதுக்குள்ளேயே (அல்லாஹ்வை) அழையுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ அழைக்கவில்லை. நீங்கள் அழைப்பது (அனைத்தையும் துல்லியமாக) செவியுறுபவனையும் (தெளிவாக) பார்ப்பவனையும் தான்! நீங்கள் அழைப்பவன் உங்களுடைய வாகனத்தின் கழுத்தை விட உங்களுக்கு மிக அருகில் உள்ளவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூமூஸா (ரலி)       நூல்கள்: முஸ்லிம், புகாரி, அஹ்மத்
     
ஆகவே கூட்டமாக சப்தமிட்டு துஆ கேட்காமல் அழகிய முறையில் அமைதியாக கேட்க வேண்டும்.
    
      துஆ என்ற நல்லாமலுக்கான கூலி இவ்வுலகிலேயே கிடைக்கும். அல்லது அல்லாஹ் மறுமையில் தருவான். எப்படியோ நம்முடைய துஆவிற்க்கு அல்லாஹ் பங்கம் ஏற்படுத்த மாட்டான். ஆகவே இறைவனிடம் கையேந்துவோம். நற்பயன் அடைவோம்.
Previous
Next Post »